பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது தேவைப்படும் சத்தியக் கடதாசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து நன்னடத்தை அதிகாரிகளுக்கும் சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வு நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி குமரி விஜயரத்ன ஆகியோரின் தலைமையில் அண்மையில் (19) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதற்கமைய நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் 325 நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான சமாதான நீதவான் நியமனத்திற்கு தேவையான விண்ணப்பத் தொகுதிகள் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேராவிடம் வைபவரீதியாக வழங்கப்பட்டது.
இந்த ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே உள்ளிட்ட பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதுடன், இதில் தமக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளை ஒன்றியத்தின் முன்னால் தெரிவித்தனர்.
நீதிமன்றச் செயற்பாட்டின் போது நன்னடத்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சத்தியக் கடதாசிகளைப் பெறுவதற்கு மூன்றாம் தரப்பினரை நாடும்போது சிரமங்களுக்கு உள்ளாவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் இவ்விடயத்தை நீதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகையில், இது காலத்துக்கு ஏற்ற பிரச்சினை என்றும், இதற்குத் தீர்வு காண்பதற்கு சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலையீடு பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இதுபோன்ற சாதகமான நடவடிக்கைகளுக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
இங்கு உரையாற்றிய சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் ரோஹினி குமாரி விஜயரத்ன, நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க முடிந்தமை இலங்கையில் உள்ள சிறுவர் சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த ஒன்றியத்தின் தலையீட்டின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உடனடியாக பதிலளித்தமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்ற குழுக்கள் மிகவும் சாதகமான முறையில் தலையீடு செய்தமைக்கு இந்த சந்தர்ப்பம் ஒரு உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன, சிறுவர்கள் தொடர்பில் மாகாண மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தினார்.
“சிறுவர் பாதுகாப்பு” தொடர்பில் மாகாண மட்டத்தில் ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் உள்ளடங்கிய தகவல்களை அமைச்சுக்கு விரைவில் வழங்குமாறும், இவற்றை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதித் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே மற்றும் கௌரவ சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளரும், பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, மேலதிக செயலாளர் நில்மினி ஹேரத், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே மற்றும் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.