இலங்கை பாராளுமன்ற அடுத்த வார அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நாளை (21) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக தெரிவித்தார்.
அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைவிட, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நாளை முற்பகல் 11.30 மணிக்கு கூடவிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் கூடவிருப்பதாகவும் திரு. தஸநாயக குறிப்பிட்டார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பில் பொது மக்களின் பரிந்துரைகள் ஜுன் மாதம் 19ஆம் திகதி வரை பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.