இலங்கை பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (24) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய, ஏப்ரல் 4ஆம் திகதி மு.ப 09.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2306/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும், 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2320/46 மற்றும் 2320/47 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.
பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடவிருந்த ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார பாராளுமன்ற அமர்வுகளுக்குப் பதிலாக ஏப்ரல் 25 செவ்வாய்க் கிழமை முதல் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.