மினி சூறாவளியினால் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிப்பு
கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று(03) திங்கட்கிழமை மதியம் 12.00மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாகவே இப்பதிப்பு ஏற்பட்டுள்ளது