ரொமேனியாவில் இலங்கைத் தூதுரகத்தை அமைப்பது தொடர்பான விவகாரம் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (22.03.2023) நடைபெற்ற சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் ரொமேனியாவில் இலங்கைத் தூதரகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ரொமேனியாவில் தூதரகத்தை அமைப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் இந்தக் குழு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவியது. ரொமேனியாவில் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையான இலங்கையர்கள் காணப்படுவதாகவும், அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை தூதரகம் இல்லாததால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
ரொமேனியாவில் ஒரு தூதரகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், பணியாளர்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விடயத்தை இனிமேலும் தாமதிக்காது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து இக்குழு விரிவாகக் கலந்துரையாடியது. அமைச்சின் 20 முக்கிய அம்ச வெளிநாட்டுக் கொள்கை உத்தரவுகள் குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விரிவாக எடுத்துக் கூறினார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது அனைத்து இறைமையுள்ள நாடுகளுடனும் நடுநிலை மற்றும் அணிசேராக் கொள்கையை நிலைநிறுத்தும் நட்புறவை அடிப்படையாகக் கொண்டது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் விளக்கமளித்தார். மேலும், இலங்கைக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என செயலாளர் குறிப்பிட்டார்.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ அகில எல்லாவல, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.