கடவுச்சீட்டுக்களை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
இதன்படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரி தமது விண்ணப்பத்தை இணையதளம் மூலம் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை ஒன்லைன் மூலமாகவோ அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடவும் முடியும், பிரதேச செயலகங்களில் தமது கைவிரல் அடையாளங்களை பதிவு செய்ய முடியும் என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 50 பிரதேச செயலகங்களில் விரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் இயந்திரங்களை பொருத்துவதுடன் அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு மூன்று நாட்களுக்குள் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே அவர்களுக்கான கடவுச் சீட்டை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.