மட்டக்களப்பு மாவட்டத்தில் 3968 கொரனா தொற்றாளர்கள், 63 பேர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையினால் 3968பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 63 பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இலங்கையில் கொரனா தொற்றாளர்களின் தொகை குறைந்து வருகின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானோர் இனங்காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 89 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அல்பா வேரியன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தற்போது டெல்டா வேரியனும் இனங்காணப்பட்டுள்ளது. இது இந்தியாவினை சேர்ந்தது, ஆபத்துநிலை கூடியது. இது எந்தநேரத்திலும் மட்டக்களப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களை வீடுகளில் இருந்து மிகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணுமாறும் வைத்திய பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.