உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற வளாகத்தில் இன்று (07) பிற்பகல் 2 மணிக்கு இதற்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் சட்டமூலத்தை தயாரித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களான கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ, கலாநிதி பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாடளாவிய ரீதியில் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக பிரதிநிதிகள் முன்வைக்கும் திருத்தங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படுமென வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.