மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியபோதே (21) அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ்மா அதிபர் .சி.டி.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸ் விசேட செயலணியின் கட்டளையிடும் அதிகாரி வருண ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்
மேல் மற்றும் தென் மாகாணங்களில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளமைக்கு, அம்மாகாணங்களின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே காரணம் என பொலிஸ்மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி அல்லது அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத துப்பாக்கிகளை பொலிஸில் ஒப்படைப்பதற்காக ஜூலை 31 ஆம் திகதி வரை பொதுமன்னிப்புக் காலத்தை அறிவிக்குமாறும் அதன் பின்னர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.