இலங்கையின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளதாகவும்,30 வருட பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இந்நாட்டில் சுகாதாரத் துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வங்குரோத்தான நாட்டில் 220 இலட்சம் பேரினதும் மீது நிதி விரயம், மோசடி, திருட்டு, முறைகேடு, தரம் குறைந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்தல், மக்களுக்கு தகவல்களை மறைத்தல், உண்மையைப் பேசும் மருத்துவத் துறையில் பல்வேறு நிபுணர்களை தன்டனைக்குட்படுத்தல், அரச அடக்குமுறை, அரச பயங்கரவாதம் போன்ற அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி இலவச சுகாதார கொள்கையை அழிக்கும் வேலைத்திட்டத்தில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், இது பயங்கரவாதச் செயலுக்கு நிகரானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) தெரிவித்தார்.
வரலாற்றுத் திருப்பதற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் பணிகளை ஆரம்பித்தார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அதன் பிரகாரமமைந்த உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் பிரகாரம் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரினால் குழுவொன்று ஸ்தாபிக்கும் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (13) காலை பாராளுமன்றத்தின் குழு அறை 8 இல் இடம்பெற்றது.
இந்தக் குழுவின் மூலம், ஊழல் மோசடிகளுக்கு வேலி அமைத்தல்,முன்னுதாரண ஆட்சிக்கு ஏற்பாடு செய்தல், அந்தந்தத் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துதல் போலவே அந்தந்தத் துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்,அரசாங்க மருந்தாளர்கள் சங்கம்,சிவில் உரிமைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் சங்கம், சுகாதார நிபுணர்கள் நிறுவனம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினர் இதில் கலந்து கொண்னர்.
இதன் நோக்கம் வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவது அல்ல என்றும் நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனவும் இங்கு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கொள்முதல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் விசேட தேவை என கூறி சட்டத்தின் 109 ஆவது பிரிவைப் பயன்படுத்தி மனித சடலங்களில் ‘மருத்துவ வியாபாரத்தை’ இவர்கள் மேற்கொண்டுவருவதாகவும், இதனால் கடந்த காலங்களில் தரக்குறைவான மயக்க மருந்து பாவனையினால் பல சிறுவர்கள் மற்றும் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இன்று புற்று நோயாளர்களுக்குத் தேவையான உயர்தர உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தயக்கம் காட்டி பழைய உபகரணங்களைப் பயன்படுத்தி வருவதாகவும்,இதன் காரணமாக சுகாதாரத் துறைசார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், எஞ்சியிருக்கும் நிபுணர்களை அரசாங்கம் தன்டனைக்குட்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல்,தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் 23 நிபுணர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு அந்தத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், சில வைத்தியர்கள் தகவல்களை சமர்ப்பித்த போது அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
தகவல் அறியும் உரிமை உள்ள இந்நாட்டில் சுகாதார அமைச்சு தகவல்களை மறைத்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் சார்பாக உண்மையைக் கூற முன்வரும் சுகாதார நிபுணர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதியளி்த்தார்.
இந்த அனைத்து திருட்டுகளையும் கண்டும் காணாதவர்களும் போல் செயற்பட்டவர்களை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,மருந்து பொருட்கள் பதிவு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை ஊடாக நாட்டு மக்களுக்கு தகவலை அறியும் உரிமை உள்ளதால், அந்தத் தகவல்களை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும், இத்தகைய தகவல்களை ஏதேனும் காரணத்திற்காக மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அத்தரப்பினர் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர் என்றும், வேண்டுமென்றே தவறு செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்,தெரிந்தே தரக்குறைவான மருந்துப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள்,மனித உயிர்களை காவுகொள்ள காரணமாக இருந்த நபர்கள் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல், மோசடி,அதிக விலைக்கு மருந்து பெறுதல்,இதனால் நாட்டுக்கு விளையும் கேடு, மருந்துப் பொருள் மோசடிகள் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றும், சரியான தீர்வுகள் எடுக்கப்படும் வரை விழிப்புடன் இருப்பதாகவும், இந்நாட்டில் சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு அடுத்த மனித பேரழிவாக அமையலாம் எனவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.