இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமக்களை விசாரிப்பதற்கும் அதுதொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை நாளை (18) பாராளுமன்றத்தில் சர்ப்பிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை முன்வைக்கப்படவுள்ளதாகவும், அது தொடர்பான விவாதத்தை வேறொரு நாளில் நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நாளையதினம் (18) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் பாராளுமன்ற அலுவல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.