கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டிடம்
பிரதேச செயலகத்திற்காக புதிய கட்டிடம் 15 கோடி ரூபா செலவில் நிர்மாணம்
மட்டக்களப்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்காக 15 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதேச செயலக புதிய கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் உட்பட ஊர்ப்பிரமுகர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர், கல்குடா தொகுதி இணைப்பாளர் மற்றும் பொதுமக்கள்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நீண்டகால தேவையாகக் காணப்பட்ட நிரந்தரக் கட்டிடம் காவத்தமுனை காகித நகர் பிரதேசத்தில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடத்திற்கான கீழ்தளம் 15 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 150 மில்லியன் ரூபா செலவில் மேல் தளம் நிர்மாணிக்கப்படவேண்டியுள்ளதாக பிரதேச செயலாளர் தவராஜா தெரிவித்தார்.
காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் அரச காணியை பராமரித்து வந்த சுமார் 50 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் இதன்போது வழங்கிவைக்கப்பட்டதுடன் மொத்தமாக 200 பேருக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்வின் நினைவாக மா மரக்கன்றுகளும் இவ்வழாகத்தில் அதிதிகளால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.