crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

1000 பில்லியன் திறைசேரி உண்டியல் வெளியிட அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

1000 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி அளித்துள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

“உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சினால் நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 1000 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிடும் யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று (21) அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில்நேற்று (21) பாராளுமன்றத்தில் கூடியபோது தற்பொழுது நிலவும் கொவிட் 19 சூழலின் மத்தியில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இக்கூட்டத்தை நடத்தும் நோக்கில் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் ஊடாக இதில் இணைந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, முஜிபுர் ரஹ்மான், கலாநிதி ஹர்ஷ.டி சில்வா, அனுப பஷ்குவல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நளின் பெர்னாந்து மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல, தற்பொழுது காணப்படும் வரையறையான 2000 பில்லியன் ரூபா பெறுமதியை 3000 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு இதன் ஊடாக எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அத்துடன் இந்தத் தொகையை 6 மாதகாலங்களுக்குள் செலவு செய்வதற்கு எதிர்பார்க்கவில்லையென்றும், பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட கடன் பெறும் எல்லைக்குள் சகலவற்றையும் நிர்வாகம் செய்வதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கும் இக்குழு தனது அனுமதியை வழங்கியது. சிறப்பு நோக்கங்களைக் கொண்ட வாகனங்களாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும் பின்னணியில் இவ்வாறு வழங்கப்படும் சலுகை பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக செயலாளர் குழுவுக்கு விளக்கமளித்தார்.

சிறப்பு நோக்கங்களைக் கொண்டதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பின்னர் சாதாரண வாகனங்களைப் போன்று பயன்படுத்தப்படுவது இதுவரை அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்துக்குப் பாரியளவு வரி இழக்கப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 947 குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட லொறிகள் (Freezer trucks) நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், இவற்றில் பல இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் குளிரூட்டல் வசதி அகற்றப்பட்டு சாதாரண லொறிகளைப் போன்று பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஆர்ட்டிக்கல மேலும் சுட்டிக்காட்டினார். இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக குறிப்பிட்ட வரித் தொகை திருத்தியமைக்கப்படவுள்ளது.

நாட்டுக்குள் மாஜரின் இறக்குமதி செய்யப்படும் நடைமுறையிலும் ஒருசில தொழில்நுட்ப காரணங்களினால் வரித் தொகை இழக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக இக்குழுவில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாந்து குறிப்பிட்டார். எதிர்வரும் காலத்தில் புதிய நடைமுறையின் கீழ் இவற்றை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் கூறினார்.

நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருந்த கருத்துத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, நிதி அமைச்சின் செயலாளரிடம் வினவியிருந்தார். தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் ஒருசில பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதுடன், இவற்றை உரிய முறையில் நிர்வகிப்பதற்கு முடிந்தளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் பதிலளித்தார்.

அதேநேரம், காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு உரிய காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கடந்த குழுவில் இது நிராகரிக்கப்பட்டிருந்த போதும், இன்று இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 73 = 81

Back to top button
error: