crossorigin="anonymous">
உள்நாடுபொது

12,992 பல்கலை விரிவுரையாளர் இருக்க வேண்டியயிடத்தில் 6,548 விரிவுரையாளர்களே பணியில்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோப் குழு முன்னிலையில்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.08.22 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) [Committee on Public Enterprises (COPE).] முன்னிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அழைக்கப்பட்டிருந்தது.

இங்கு, 2023 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின்படி, அனைத்து அரச பல்கலைக்கழக கட்டமைப்பையும் நவீனமயமாக்குவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய மூலோபாயத் திட்டம் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எம். பத்மலால் உள்ளிட்டோர் இதன்போது அழைக்கப்பட்டிருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நிர்வாகம் தொடர்பில் கௌரவமான பெயரைக் கொண்டிருப்பதனால், அரச பல்கலைக்கழக கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான தேசிய மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது எனவும் இது பாராளுமன்றத்தால் அந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்த கௌரவமாக கருதப்பட வேண்டுமெனவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், இதற்காக அர்ப்பணித்த கல்வி அமைச்சு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திசா பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு விசேட நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்துவமான சூழ்நிலைகள் இருப்பதால், அந்த அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த வரைபின் பிரகாரம் செயற்பட முடியும் என சிரேஷ்ட பேராசிரியர் திசா பண்டார சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் பல்கலைக்கழகக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ள பின்னணியில், இரண்டு வாரங்களுக்குள் செயலணியொன்றை நியமித்து இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு குழு அறிவித்தது.

அனைத்து பல்கலைக்கழகக் கட்டமைப்பையும் வீழ்த்துவதற்கு ஒரு சில சிறிய மாணவர் குழுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேண வேண்டிய பொறுப்பு மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் உள்ளதாக கோப் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்நாட்டிலுள்ள சுமார் 50% பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 12,992 இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 6,548 விரிவுரையாளர்களே பணிபுரிந்து வருவதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், கல்விசாரா பணியாளர்களிலும் இந்த நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளதால் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிக்கலாக மாறியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 1,000 விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − 42 =

Back to top button
error: