இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான தேசிய மீலாதுன் நபி விழா 2023 இம்முறை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (26) சனிக்கிழமை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் ஒழுங்கமைப்பில் புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
மீளாய்வு கூட்டத்தில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா முதல் முறையாக மன்னார் மாவட்டத்தில் நடத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
விழாவிற்கான சுகாதார, ஏற்பாடுகள், போக்குவரத்து, போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இவ் வருடம் மீலாதுன் நபி விழாவில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மீளாய்வு கூட்டத்தில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.