மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டளஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டார்.
குறித்த ஒன்றியம் முதல் தடவையாக நேற்று (06) பாராளுமன்றத்தில் கூடியபோது அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சரித ஹேரத் முன்மொழிந்ததுடன், வைத்தியகலாநிதி (கௌரவ) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே வழிமொழிந்தார்.
பிரதி இணைத் தலைவர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ அஜித் மான்னப்பெரும ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களின் பெயர்களைப் பாராளுமன்ற உறு்பபினர் கௌரவ வீரசுமன வீரசிங்க முன்மொழிந்ததுடன், கௌரவ கருணாதாச கொடித்துவக்கு வழிமொழிந்தார்.
ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைவர், முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தை அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்றுமாறு அறிவுறுத்தினார். இதன் மூலமே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தற்போதைய தகவல்கள் மற்றும் தரவுகள், செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டம் குறித்து குழு புரிந்து கொள்ள முடியும் என்று தலைவர் குறிப்பிட்டார்.
கல்வி, போக்குவரத்து, சட்டம், சுகாதாரம் ஆகிய துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகத் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். இதற்கு அமைய மாற்றுத்திறனாளிகள் சார்பில் செயல்படும் அரசுசார்பற்ற நிறுவனங்களை அழைத்து அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் இதுவரை நாட்டில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர் என்பது குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அவசியத்தையும் ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். அதன் படி கிராம உத்தியோகத்தர்கள் உரிய தரவுகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம் என எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
அனுதாபத்துடன் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளை வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) கௌரவ சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கௌரவ லலித் எல்லாவல, (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத், சட்டத்தரணி, கௌரவ மதுர விதானகே, கெளரவ ஜகத் குமார சுமித்திராரச்சி, கௌரவ குணபால ரத்னசேகர, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ கருணாதாச கொடித்துவக்கு, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ பிரேமநாத் சி. தொலவத்த, கௌரவ கே.பி.எஸ்.குமாரசிறி, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ ரோஹினி விஜேரத்ன, கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.