“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு இம்மாதம் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது.
“G77 மற்றும் சீனா” நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடானது ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுக்கு அமைய வளர்ந்து வரும் 134 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான குழுவாக கருதப்படுகிறது.
இது தென்பிராந்திய நாடுகளுக்கு அவற்றின் கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும், அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மற்றும் கூட்டு பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கான திறனை மேம்படுத்தவும் வாய்ப்பை வழங்குகிறது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உள்ள சமகால சவால்களை மதிப்பிடுவதற்கும், அதிக பலன்களை அடைவதற்கான கூட்டுத் தீர்வுகளை ஆராயவும், குறிப்பாக தென் பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், வளர்ந்து வரும் நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை ஆராயவும் இந்த மாநாட்டின் ஊடாக மேலும் வாய்ப்பு ஏற்படும்.
உச்சிமாநாட்டில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க தென் பிராந்திய நாடுகளில் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய அணுகுமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் ‘ஹவானா பிரகடனத்தை’ அரச தலைவர்கள் நிறைவேற்ற உள்ளனர்.