உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சியால் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள ஆதாரமற்ற, மோசமான குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு எந்தவொரு நபரினதும் அல்லது நிறுவனத்தினதும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதாகவும் புலனாய்வு பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான தீவிரவாத குழுவின் பொறுப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Channel 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பழியை இராணுவ புலனாய்வுப் பிரிவு மீதும் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் அப்பட்டமாக போடுவதற்கு முயற்சிப்பதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியதாகவும் குண்டுதாரிகளுக்கு ஆதரவளித்ததாகவும் 36 வருடங்களாக நாட்டிற்காக சேவையாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 2016 டிசம்பர் மாதத்தில் இருந்து 2018 டிசம்பர் வரை மலேஷியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சின் ஆலோசகராக பணியாற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
அவர் 2019 ஜனவரி 03 ஆம் திகதி இந்தியா சென்று டெல்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கைகளை பூர்த்தி செய்து 2019 நவம்பர் 30 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Channel 4 தொலைக்காட்சியின் ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் அவர் இலங்கையில் இருக்கவில்லை எனவும் அமைச்சு கூறியுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதிக்குள் சுரேஷ் சலே, இலங்கையின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் பணிக்கு அமர்த்தப்படவில்லை எனவும் அந்த துறைகளில் எவ்வித பொறுப்புகளையோ பதவிகளையோ அவர் வகிக்கவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு பயங்கரவாதியும் அரசாங்கத்தின் சம்பளப் பட்டியலில் இல்லை என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
எனவே, இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் இத்தகைய ஆதாரமற்ற மற்றும் அடிப்படையற்ற தகவலை பரப்பியதற்காக Channel 4 தொலைக்காட்சிக்கு தனது கடுமையான அதிருப்தியை தெரிவிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், உண்மையை வெளிக்கொணர்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்ட வெளிப்படையான விசாரணைகளுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய Federal Police மற்றும் அமெரிக்காவில் உள்ள Federal Bureau of Investigation என்பவற்றால் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளும் அமெரிக்க நீதித்துறையின் தீர்ப்புகளும் உள்ளூர் விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளமையை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச புலனாய்வு அமைப்பின் இந்த உறுதியான ஒப்புதல் விசாரணைகளின் துல்லியம் மற்றும் நேர்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியான மற்றும் உண்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் Channel 4 இன் தூரநோக்கற்ற மற்றும் மோசமான நடத்தையின் ஊடாக முரண்பாடுகளை விதைப்பதன் மூலம் இலங்கை சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைப்பது மாத்திரமன்றி அவர்களின் நேர்மை மற்றும் பொறுப்பை உறுதியுடன் நிலைநிறுத்தியவர்களின் நற்பெயரையும் பாதுகாப்பையும் பாதிப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.