crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளது

அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும். ஏற்கனவே 2003-2004 காலப்பகுதியில் அயோராவில் தலைமை வகித்த இலங்கை, இரண்டாவதாகவும் தலைமைப்பொறுப்பை ஏற்கவுள்ளது.

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA), என்பது இந்தியப் பெருங்கடலின் 23 கரையோர மாநிலங்களை ஒன்றிணைக்கும் அரசுகளுக்கிடையேயான ஒரே பிராந்திய மன்றமாகும்.

இச்சங்கத்தில் 11 உரையாடல் பங்குதாரர்கள் உள்ளனர். இலங்கை இச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகும். இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA), 2022 இல் அதன் 25 வது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்தது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமொரோஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைத்தீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யேமன் ஆகியவை இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் உறுப்பு நாடுகளாக விளங்குவதுடன், சீனா, எகிப்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உரையாடல் பங்குதாரர்களாக விளங்குகின்றன.

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), முடிவெடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாக அமைச்சர்கள் குழு விளங்குவதுடன், இலங்கையின் தலைமைத்துவத்தின் போது வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமைச்சர்கள் மன்ற தலைவராக செயற்படுவார். வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன, அமைச்சர்கள் சபைக்கு முன்னதாக நடைபெறும் IORA சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.

இலங்கை தனது IORA இன் தலைமைத்துவத்திற்கான கருப்பொருளாக, “பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்தலும், இந்து சமுத்திரத்தின் அடையாளத்திற்கு வலுவூட்டலும்” என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது. 2023 அக்டோபரில் கொழும்பில் நடைபெறவுள்ள, இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம், அமைச்சர்கள் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் ஆகியவற்றுக்கு, 23 அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் மற்றும் 11 உரையாடல் பங்குதாரர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 40 = 49

Back to top button
error: