crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்

நகர அபிவிருத்தி, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ

இலங்கையின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

கனிய வளங்களை பாவனை செய்து மேற்கொள்ளும் உற்பத்திகளுக்கு உயர் பெறுமதியை வழங்க முடியும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய இந்நாட்டின் அரச நிதியில் இயங்கி வந்த அரச நிறுவனங்களை சுய உற்பத்தித் திறனுடன் இயங்கும் நிறுவனங்களாக மாற்றி வருகின்றோம். உலகின் பிரதான கடற்கரைப் பரப்பை கொண்டுள்ள நாடு என்ற வகையில், இயற்கை அழகும், இயற்கை வளங்கள் நிறைந்ததுமான இந்நாட்டின் கடற்கரைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான கரையோரங்களில் கடல் அரிப்பு நிகழும் போது அந்த பிரச்சினைக்கு அரசாங்க நிதியில் தீர்வுகளை வழங்கிவந்த கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் தற்போது சுற்றுலாத்துறையுடன் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மறு முனையில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் சிறு மற்றும் மத்திய பரிமாண, பாரிய ஹோட்டல்கள் முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயங்களில் அரசாங்கம் தலையீடு செய்து நீண்டகாலம் காணப்படும் கட்டிடங்களில் கட்டாயமாக அகற்ற வேண்டியவைகளை அகற்றவும், சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு உதவுவோருக்கு அவசியமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா , அவுஸ்திரேலியா, மாலைதீவுகளில் கடற்கரை வளம் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இலங்கையின் கலாசாரத்திற்கு இணங்க நாமும் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு கடற்கரை வலயங்களை கலாசார நிகழ்வுகள், சிறுவர் நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்களுக்காகவும் நாம் வழங்குகிறோம். அதனால் திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் குறிப்பிட்டளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.

எமது நாட்டின் மிக அழகிய 24 கடற்கரைகளை தற்போது பெயரிட்டுள்ளோம். அதேபோல் நீண்ட கால வேலைத்திட்டங்களுக்காக, முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, காணி அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய முதலீட்டாளர்களுக்கு கடற்கரை வலயங்களை முதலீட்டுக்காக பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதனால் கடற்கரை பாதுகாப்புக்கு மேலதிகமாக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத்துறை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் எமது கடற்கரைகளில் இல்மனைட் போன்ற கனிய வளங்கள் உள்ளன. தற்போது இந்திய நிறுவனமொன்று தென் மாகாணத்தில் கனிய வளங்கள் மீதான முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. அந்த பணிகள் நாட்டிற் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் சுற்றாடல் திணைக்களம், புவிச்சரிதவியல், அளவை சுரங்கப் பணியகம், காணி அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்புச் சபை ஆகியவைகளுடன் இணைந்து அந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

ஒரு நாடு என்ற வகையில் எமது வளங்களுக்கான பெறுமதி சேர் செயற்பாடுகளை செய்ய தவறியுள்ளோம். அதனால் மதிப்புயர்வு ஏற்படுத்துவதற்கான நிறுவனங்கள் நாட்டில் நிறுவப்பட வேண்டும். அதேபோல் கரையோரப் பாதுகாப்பு அதிகார சபையையும் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அதனால் சாதகமான பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்புகிறோம்.

இன்றளவில் நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியில் உள்ளனர். அந்த நிலையிலிருந்து மீள்வதற்கு அமைச்சுக்கள் தங்கள் வசமாகவுள்ள வளங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மறுமுனையில் ஹில்டன், ஹயார்ட், வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டல், கிரேண்ட் ஒரியன்ட் ஹோட்டல், கபூர் கட்டிடத்தொகுதி, கொழும்பு சாமர்ஸ் கார் தரிப்பிடம் உள்ளிட்ட கொழும்பு நகரிலுள்ள வளங்களும் கொழும்பு லேக் ஹவுஸ் கட்டிடத்திலிருந்து தாமரை கோபுரம் வரையிலான முதலீட்டுக்கு பெறுமதியான நிலப்பரப்பு ஒன்றும் எம்மிடத்தில் காணப்படுகின்றது. அதிலுள்ள சிறிய பிரச்சினைகளை நிவர்த்தித்து முதலீடுகளுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஹில்டன் ஹோட்டலை விற்பனை செய்யப்போவதாக பலர் கூறுகின்றனர். ஹில்டன் ஹோட்டலில் அரசாங்கத்திற்கு 75 சதவீத வருமானம் கிட்டினாலும் அதன் சில பகுதிகளை கட்டமைக்க போதிய நிதி இல்லை என்பதால், தனியார் துறையுடன் இணைந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் அதனை மதிப்பாய்வு செய்யும் பணிகள் ஜனாதிபதியினால் தனியான குழுவொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மதிப்பாய்வு செய்யும் போது, கவலைக்குரிய நிலைமை காணப்படுகின்றது. அதனால் அதனை மறுசீரமைக்கவும் முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருக்கிறோம். தொழிற்சங்களும் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன, கொழும்பு ஹயார்ட் ஹோட்டலை தற்போதைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மக்கள் பணம் பெருமளவில் செலவிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களை அவ்வண்ணமே பேணினால் பெருமளவான நட்டம் ஏற்படும்.

அதேநேரம் கொழும்பில் முதலீடுக்கான வழங்கப்படும் எந்தவொரு இடமும் ஜனாதிபதியின் அனுமதியின்றி வழங்கப்படாது என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. கொழும்பு கிரிஸ் ஹோட்டல் பணத்தை பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளை இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளது. அதனையும் முதலீட்டாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்மாண துறையின் சரிவு காரணமாக பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் தொழிற்சாலை வங்கியொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பிலான விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் கையிலெடுத்துள்ளது. குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர் களையேனும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் நாட்டில் சுற்றாடல் மற்றும் கடல்வள பாதுகாப்புச் சட்டமொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், வரவிருக்கும் வரவு செலவு திட்டத்திற்கு நெருக்கடியாக இருக்காமல் சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு மேலதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்பட்டு வருகின்றோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 85 =

Back to top button
error: