நிகழ்நிலைக் காப்பு தொடர்பான சட்டமூலமானது மாற்றுக்கருத்து மற்றும் கருத்துச்சுதந்திரம் மீதான பாரிய அச்சுறுத்தலாகும் என சுதந்திர ஊடக இயக்கம் (FMM) அறிக்கை (21) வெளியிட்டுள்ளது
சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு தொடர்பான புதிய சட்டமூல வரைவானது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும், மாற்றுக்கருத்து கொண்டவர்களை ஒடுக்கவும் பயன்படும் அபாயம் காணப்படுவதாகச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.
இலங்கையில் இதுவரை ICCPR சட்டம் மோசமான முறையில் பயன்படுத்தப்படும் பின்னணியில் இந்த உத்தேச சட்டமூலம் அமுல்படுத்தப்படுமாயின் சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
ஆன்லைன் தளங்களில் பயனர்களை அல்லது பிறரைத் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் , புரளி மற்றும் பொய் செய்தி பரவல் (பிற பிரிவுகள் உட்பட), வெறுக்கத் தக்க பேச்சு போன்றவற்றை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை காணப்பட வேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை சமூக தரநிலை மற்றும் பல துறைசார் பங்கேற்பின்றி டிஜிட்டல் ஊடக கல்வியறிவை மேம்படுத்தல், நெறிமுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கருத்தில்கொள்ளாமல் சுயாதீனத்துவம் தொடர்பான சந்தேகத்திற்கிடமான ஆணைக்குழு நியமிப்பதன் ஊடாகச் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் எதிராளிகளை ஒடுக்கவும், அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்திற்கு எதிராக இணையத் தளங்களில் குரல் கொடுப்பதை தடுக்கவும் இடமளிக்கும் புதிய பாதையொன்றை அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.
அவ்வாறான சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், தற்போதைய அரசாங்கமோ அல்லது அதிகாரத்திற்கு வரும் எதிர்கால அரசாங்கமோ அதனைத் தவறாகப் பயன்படுத்தாது என உறுதியளிக்க முடியாது.
உத்தேச சட்ட விதிகளின்படி ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்படுமாயின் அதனைச் சுயாதீன ஆணைக்குழு என அழைப்பது நியாயமானதா எனச் சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்புகின்றது.
மேலும், இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்குப் பரந்த விளக்கங்கள் கொடுக்கப்படலாம் என்பதால், ஏதாவது ஒரு விடயம் தொடர்பில் அது தவறான விடயம் என வரைவிலக்கணம் அளித்து குறித்த மாற்றுக்கருத்தை முடக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படும் காரணத்தால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துச்சுதந்திரம் சவாலுக்கு உட்படுத்தப்படும். உத்தேச சட்டமூலத்தின்படி, சமூக ஊடக வசதிகளை வழங்கும் இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் பதிவு செய்யப்படாத சமூக ஊடக தளங்களை இந்நாட்டு மக்கள் இழக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியில், துஷ்பிரயோகத்திற்கு அதிக சாத்தியமுள்ள அடக்குமுறைச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான தரநிர்ணயம் மற்றும் நெறிமுறைகளை ஊக்குவித்தல் குடிமக்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் உட்பட தற்போது காணப்படும் சட்ட கட்டமைப்பை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் போன்ற மாற்று தேர்வை ஏன் அரசாங்கம் குறிப்பிடவில்லை என்பது தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் அரசிடம் கேள்வி எழுப்புகின்றது.
இந்த சட்டமூலத்தை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், கருத்துகளை நசுக்குவதற்குப் பதிலாக நாகரீகமான முறையில் பதிலளிக்கும் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகிறது.” என சுதந்திர ஊடக இயக்கம் வெளியிடுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.