முதியோர் தினத்தினை முன்னிட்டு கத்தான்குடியில் இரத்ததான நிகழ்வு
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் ஏறட்பாட்டில் இரத்த தான நிகழ்வு இன்று (01) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
முதியோர் இல்லத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் ஆரம்பமான இவ்விரத்த தான முகாமிற்கு ஆண், பெண் இளைஞர், யுவதிகளென அதிகமான உதிரக் கொடையாளர்கள் கலந்து கொண்டு உதிரக் கொடையில் ஈடுபட்டனர்.
வருடந்தோறும் ஒக்டோபர் 1ம் திகதியாகிய சர்வதேச முதியோர் தினத்தில் இவ்விரத்த தான நிகழ்வினை காத்தான்குடி முதியோர் இல்லம் இரண்டாவது தடவையாக நடாத்தி வருகின்றது.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர். அலீமா றஹ்மான் தலைமையிலான வைத்தியர்கள், தாதியர்கள் அடங்கிய சுகாதார உத்தியோகத்தர் குழு இவ்விரத்த தான முகாமில் ஈடுபட்டுள்ளனர்.
உறவினர்கள் இல்லாத, குடும்பங்களினால் கைவிடப்பட்ட, வலது குறைந்த மற்றும் புத்தி சுவாதீனமற்ற முதியவர்கள் 32 பேர் இம்முஸ்லிம் முதியோர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்
. சுமார் 35 முதியோர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான வசதிகள் கொண்ட இவ்வில்லத்திற்கு கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களம் மற்றும் நலன் விரும்மிகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
பொதுமக்கள் தமது வாழ்நாளின் முக்கிய தினங்களை இங்குவந்து முதியவர்களுடன் கலந்து கொண்டாடுவதும், அவர்களுக்கான அண்பளிப்புகளை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.