தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) தெரிவித்தார்
சீனாவில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் மூன்றாவது சர்வதேச மாநாட்டிற்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியடநாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (18) பீஜிங் நகரில் நடைபெற்றது.
இரு நாடுகளிலும் தாக்கம் செலுத்தும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்த அதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் தலைமையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால எதிர்பாப்புக்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது விளக்கமளித்தார்.
சரிவடைந்திருந்த வியட்நாம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் பின்பற்றிய செயன்முறைகள் தொடர்பிலும் அதன்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் வியட்நாம் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும், இலங்கையில் விவசாய துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
ஒன்றினைந்து முன்னோக்கிச் செல்லும் பாதைக்கான புதிய பிரவேசம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.