‘பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்’ – ராகுல் காந்தி
இந்தியா பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி ‘டாய்கத்தான்-2021’ நடத்துகிறது.
டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் ‘‘சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது.
ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது. சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும்’’ என பேசினார்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது
“நாட்டில் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என கூறி உள்ளார்.(இந்து)