crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச தகவல்கள் தனியார் நிறுவனத்திடமிருப்பது அபாயம்

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவிப்பு

இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன தலைமையில் 2023.10.18 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்யப்படாமை குறித்துக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அந்தப் பதவி தொடர்பான ஆட்சேர்ப்புக்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக இதன்போது தெரியவந்தது.

ஆனால், இந்தத் தகவல் தொழிநுட்பப் பணிப்பாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள சம்பளம் காரணமாக எவரும் அதற்கு விண்ணப்பிப்பதில்லை என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த குழு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் படி கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பதவிக்கு, சந்தையில் தற்போதைய சம்பளத்தில் பொருத்தமான ஒருவரை அந்தப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கம்பனிகள் பதிவு செய்யும் முறையை கணினிமயப்படுத்தும் மென்பொருள் (e – Roc கட்டமைப்பு) தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

அதன்போது, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தரவுகள், இந்த e – Roc கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ள பின்னணியில் தனியார் நிறுவனமொன்று கணினிக் கட்டமைப்பை கையாளுவதன் அபாயம் தொடர்பில் குழு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதற்கமைய, இந்தக் கணினிக் கட்டமைப்பை தயாரித்த நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தரவுகளின் பாதுகாப்பு மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு குழு ஆலோசனை வழங்கியது.

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட கம்பனிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைகளை அறவிடாமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் வினவியது. இதன்போது, பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தக் கம்பனிகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளில் இதுவரை செயற்படும் நிலையில் உள்ள கம்பனிகளின் எண்ணிக்கை, எத்தனை கம்பனிகளிடமிருந்து எந்தளவு தொகை நிலுவைகள் அறவிட வேண்டும் என குழுவின் தலைவர் வினவினார். அது தொடர்பான தகவல்களை முழுமையாகப் பெறுவதற்கான கட்டமைப்பொன்று இல்லை எனச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இடம்பெற்றுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்ய எதிர்காலத்தில் முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதாகத் தெரிவித்தனர். அத்துடன், தற்பொழுது வரை கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளில் செயற்படும் நிலையில் உள்ள கம்பனிகளை இனங்காண்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

கம்பனிகள் பதிவின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 85 மில்லியன் ரூபாய் செலவில் ஆவணங்கள் ஸ்கேன் (scan) செய்தமை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதில் ஸ்கேன் (scan) செய்த ஆவணங்களில் அனைத்து ஆவணங்களும் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்றும் தேவையின் நிமித்தம் அந்த அனைத்து ஆவணங்களும் கட்டமைப்பில் சேர்க்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கம்பனிகள் பதிவின் போது மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்தமை தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அரச கம்பனிகளை பதிவு செய்யும் போது தனியார் பெயர்களில் பதிவு செய்வதால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, திணைக்களத்திலுள்ள கணினிக் கட்டமைப்பின் ஊடாகவே அந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நிறுவனத்தின் செயற்பாட்டுகளைப் பாதிக்கும் சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தேவையான சட்ட திட்டங்களை தயாரிப்பதற்கு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும் கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 10 + = 18

Back to top button
error: