(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி நகரை பசுமை நகரமாக மாற்றும் திட்டம் ஒன்று கண்டி மாநகர சபையால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சில அபிவிருத்திப் பணிகள் அண்மையில் (25) மேற்கொள்ளப்பட்டன.
அது தொடாபாக கண்டி மாநகர சபை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
“தலைக்கு நிழலும், உடலுக்கு சுத்தமான காற்றும். கண்களுக்கு அழகையும் சேர்ப்பதன் ஊடாக கண்டி நகரில் வசதியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் கண்டியை பசுமை நகரமாக மாற்றும் திட்டம் ஒன்று கண்டி மாநகர சபையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரை அழகுபடுத்தும் மேற்படி திட்டத்தின் மற்றொரு திட்டமாக (24) கண்டி மின்சார சபை காரியாலயத்திற்கு அண்மையில் உள்ள இலங்கை மின்சார சபை காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஶ்ரீலங்கா டெலிகொம் வரையான புகையிரத பாதைக்கு சமாந்தரமாக அமைக்கப்பட்டுள்ள நடை பாதையை அழகுபடுத்தவும் நிழல் மரங்களை நடவும் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் படி அதன் பணிகளை ஆரம்பித்தது.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டுள்ள பாரிய நிழல் மரங்களில் அழகான மலர்க் கொடிகள் படரவிடப்பட உள்ளன. நகரத்தின் அனைத்து வெளிப்புற இடங்களும், வீதியின் இரு புறமும் நிழல் மரங்களை நடுவதன் மூலம் கண்டி நகரம் வாழ்வதற்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் நகர பூங்காக்கள் பராமரிப்பு பிரிவின் ஊழியர்களால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது” எனவும் கண்டி மாநகர சபை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.