ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கொண்டு செல்லும் திட்டத்திற்கு அமைய வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருளிட்கு அமைவாக சிறைவாசம் செய்யும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்று (26) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டதுடன், பாரிய வேலைத்திட்டமாக கருதப்பட்டும் இச்செயற்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மட்டக்களப்பு சிறைச்சாலையை சென்று பார்வையிட்டதுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.
சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தலைமையில் திருப்பெருந்துறையிலுள்ள சிறைச்சாலைக்கு சொந்தமான பண்ணையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்தி குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர மற்றும் அமைச்சர்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.