ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொலை குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.
இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன. போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். அவருடன் இருந்த 3 போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி டெர்ரக் சவுவினுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மினியாபொலிஸ் நீதிமன்றம் விதித்துள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு டெர்ரக் சவின் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்திடம் மன்னிப்பு எதும் கேட்காமல் தனது இரங்கலை பதிவு செய்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு குறித்து ஜார்ஜ் பிளாய்ட் வழக்கறிஞர் பெஞ்சமின் கூறும்போது, “அமெரிக்காவில் இன ரீதியான நல்லிணக்கத்திற்காக விதிக்கப்பட்ட வரலாற்று நடவடிக்கை” என தெரிவித்துள்ளார். இத்தீர்ப்புக்கு அமெரிக்க கறுப்பின மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.(இந்து)