வட மாகாண ஆளுநர் ஆயுர்வேத வைத்தியர் விசேட கலந்துரையாடல்
வட மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகள் மற்றும் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ் எம் . சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்தியர்களின் பிரதிநிதிகள், அடிப்படை வசதியற்று இயங்கிக்கொண்டிருக்கும் வைத்தியசாலைகளின் பிரச்சனைகள், சேவைப்பிரமாணக் குறிப்பிலுள்ள பிரச்சனைகள், ஆளணி தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துக் கூறினர்.
இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள்,
‘தற்போது மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை என்பன மிக அரிதாகி வருவதாகவும் இதற்கு முக்கிய காரணம் ஆயுர்வேத திணைக்கள சேவைகளின் குறைபாடுகளே என சுட்டிக் காட்டியதுடன் ஆயுர்வேத்திற்கு முக்கியமளிக்கும் வகையில் ஆயுர்வேத மருத்துவ வசதிகளை கிராமமட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று வீட்டில் மூலிகைத் தோட்டங்களை உருவாக்கவும், இணையவழி வர்த்தகம், கண்காட்சிகள் போன்ற செயற்பாடுகளினை சமுதாய மருத்துவ உத்தியோகத்தர்கள் ( Community medical officers) மூலமாக தொற்றா நோய்களை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்கும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் தற்கால இளம் சமுதாயத்தை தூண்டக்கூடிய வகையில் இயற்கை முறையிலான வாசனை திரவியம் மற்றும் முகப் பவுடர்கள் கிடைப்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டதுடன் அவற்றின் உற்பத்தி அதிகரிக்க பிரபல நிறுவனங்களுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அறிவுறுத்தினார்.
அடுத்த வருடத்திற்கான ஆயுர்வேத திணைக்கள செயற்பாடுகளுக்கான திட்டத்தை சமர்ப்பிக்கவும், ஆயுர்வேத நடமாடும் வைத்தியசாலை செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.