கனடாவில் வரலாறு காணாத வெப்பம், பலர் பலி
கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.
அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள்.கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டனில் அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவானது. அதற்கு முந்தைய வாரம்வரை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடக்கவில்லை.
வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஞ், “உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்னை,” என்று தெரிவித்துள்ளார்.(பிபிசி)