உயர் கல்விக்காக மாணவர் கிரெடிட் கார்ட் திட்டம் அறிமுகம் – முதல்வர் மம்தா பானர்ஜி
இந்தியா – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உயர் கல்விக்காக மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின்படி மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை கடனாகப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் உயர் கல்விக்காக கிரெடிட் கார்டு திட்டத்தை வாக்குறுதியாக அளித்திருந்த நிலையில், தற்போது இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்துக்குக் கடந்த வாரம் கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்தத் திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது,
’’மேற்கு வங்க அரசு சார்பில் இந்தத் திட்டத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். மாநில இளைஞர்கள் சுயசார்பு உடையவர்களாக முன்னேற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தக் கடனை இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்கும் இளங்கலை, முதுகலை, பிஎச்டி, ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளாக வசிப்பவர்கள் மற்றும் 40 வயதுக்குக் குறைவானவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடங்க, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன்படி மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை பணம் கடனாகப் பெறலாம்.
இந்தத் தொகைக்கு மிகவும் குறைந்த ஆண்டு வட்டியே வசூலிக்கப்படும்.15 ஆண்டுகள் வரை பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படும்’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.(இந்து)