இந்தோனேசியாவில் கொரோனா தீவிரம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது குறித்து இந்தோனேசிய ஊடகங்கள், “ இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது.
கொரோனா டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது.
ஜோஜ்யகார்த்தாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 30 பேர் பலியாகி உள்ளனர். திங்கட்கிழமை மட்டும் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தோனேசியாவுக்கு இதுவரை 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் கோவாக்ஸ் பகிர்வு திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு அடுத்த இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.(இந்து)