2021 செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன், இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஜூலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும் குருநாகல் மாவட்டத்துக்கு இரண்டு இலட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளை, முறையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி அவர்கள் சுகாதாரத் துறையினருக்கு எடுத்துரைத்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கெனவே முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ளவற்றை, கேகாலை மாவட்ட மக்களுக்காக, முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென வழங்குமாறும், ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.