அமைச்சரவையிலுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்கு – ஆய்வறிக்கை
90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ஒரு அமைச்சருக்கு 16.24 கோடி சொத்து
இந்தியாவின் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் தேர்தல் பிராமணப் பத்திரத்தை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 24 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 4 பேர் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குகள் உள்ளன. 5 பேர் மீது வகுப்புவாத ஒற்றுமையைக் குலைத்ததாக வழக்குகளும், 7 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குகளும் உள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் இந்த அறிக்கையின்படி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ஒரு அமைச்சருக்கு 16.24 கோடி சொத்துள்ளது. நான்கு பேருக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
அதேபோல், 12 மத்திய அமைச்சர்கள் 8 வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளனர். 64 அமைச்சர்கள் பட்டப்படிப்போ அல்லது அதற்கு மேலோ படித்துள்ளனர். இரண்டு பேர் டிப்ளமோ படித்துள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.(நக்கீரன்)