ஆப்கானிஸ்தானின் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் திரும்ப அழைப்பு
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடைய கடும் சண்டை மூண்டுள்ளதால், காந்தகார் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானல் முகாமிட் டிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டின் 2-வது பெரிய நகரான காந்தகார் கடந்த9-ம் தேதி தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராணுவத்துக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறும்போது,
“காந்தகார் நகரில் உள்ள துணைத் தூதரக அலுவலகம் மூடப்படவில்லை. எனினும், அங்கு சண்டை நடைபெறுவதால் அங்கு பணியாற்றிய இந்திய அதிகாரிகள் தற்காலிகமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால் உள்ளூர் ஊழியர்களைக் கொண்டு அலுவலகம் தொடர்ந்து இயங்கும். மேலும் காபுல் நகரில் செயல்படும் இந்திய தூதரகம் மூலம், விசா வழங்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆப்கனைச் சேர்ந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அதிகஅளவில் இந்தியாவுக்கு வருகின்றனர். இதற்கான விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக காந்தகார் துணைத் தூதரகம் விளங்குகிறது. இந்நிலையில், அங்கு சண்டை நடைபெறுவதால், விசா பெறுவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.(இந்து)