திருகோணமலை – கோமரங்கடவெல பிரதேச குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை காலமும் காணி அளிப்புபத்திரமின்றி வசிக்கும் 298 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (14) கோமரங்கடவெல மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அடம்பனை கிராமத்தில் நடைபெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுள் பல நடைபெற்று வரும் வேளையில் இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தாம் வசிக்கும் காணி அனுமதிப்பத்திரம் இன்றி சிரமப்பட்டதாகவும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எங்களுக்கென்ற காணியுரிமை என்று சொல்லக்கூடிய குறித்த காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கியமை குறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக இதன்போது அனுமதிப்பத்திரத்தை பெற்ற பயனாளி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேச சபை தவிசாளர்கள், கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோன் ,சக உத்தியோகத்தர்கள், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.