(ஜவாஹிர் எம் ஹாபிஸ் )
கண்டி – வத்துகாமம், மடுல்கலைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் காட்டி, கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்த பல்வேறு உரிமைகள் தற்போது மறுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்து நேற்று (01) பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மடுல்கலை- பம்பரெல்ல சந்தியில் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் மடுல்கலையை சூழ உள்ள கோமறை, ஹாகலை, கல்பிஹில்ல, மடுல்கலை, போன்ற பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் காட்டி தம்மை ஏமாற்றியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒருநாளைக்கு 25 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்றும் அப்படியல்லாத பட்சத்தில் தமக்கு பாதியளவு சம்பளமே வழங்கப்படுவதாகவும், இதுபோன்ற பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நாளாந்தம் தாம் ஏற்கனவே பெற்ற மொத்த சம்பளத்தை விட தற்போது குறைந்தளவே மொத்த மாதாந்த சம்பளம் கிடைப்பதாகவும் இதனால் தாம் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆா்பாட்டத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.