சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
சீனாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து சீனாவில் தேசிய சுகாதார அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கடந்த 4ஆம் தேதி கரோனா தொற்று 85 ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 125 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 80 பேருக்கு சமூகப் பரவலில் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா சோதனை நடத்தியது சீனா. இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
2019ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அமெரிக்க குடியரசுக் கட்சி இவ்வாரத் தொடக்கத்தில் வெளியிட்டது. ஆனால், இது குறித்து சீனா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.(இந்து)