கொரோனா சுயமாக பரிசோதனை ‘கோவிசெல்ஃப்டிஎம்’ (CoviSelfTM) கிட்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்
கொரோனா நோய் அறிகுறி இருப்பவர்கள் அல்லது வைரஸ் தொற்றாளருடன் நேருக்கு நேராக தொடர்பில் இருந்தவர்கள், வீட்டில் இருந்தபடியே சுயமாக பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிசெல்ஃப்டிஎம் (CoviSelfTM) கிட்டுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் என்ற மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள இந்த கிட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைக்கு உட்படும் சூழல் எழுந்தால் மட்டுமே இந்த கிட்டுகளை பயன்படுத்தலாம்.
எனவே, இனி கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய மாதிரிகளை வழங்க பரிசோதனை கூடத்துக்கு செல்ல வேண்டியதில்லை.
முதல் விதியாக, கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் எனப்படும் சுய பரிசோதனை கிட் மூலம் தங்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். இதில் பாசிட்டிவ் என முடிவு வந்தவர்கள், கொரோனா தொற்றாளராக கருதப்படுவார். அவர், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது ஐசிஎம்ஆர்.
அதே சமயம், கொரோனா அறிகுறி இருந்து அவர்களுக்கு முடிவு நெகட்டிவ் என வந்தால், அவர் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம், பல நேரங்களில் வைரஸ் அளவு குறைவாக சுயபரிசோதனையில் தெரிய வரலாம். எனவேதான் முன்னெச்சரிக்கையாக சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்துகிறது.
ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் எனப்படும் வீட்டில் இருந்தபடியே சுய பரிசோதனை செய்து கொள்ளும் கிட்டில், எப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என்ற வழிமுறை அடங்கிய குறிப்பு இணைக்கப்பட்டிருக்கும். மூக்கு துவாரம் வழியாக சளி மாதிரியை எடுத்து அதன் மூலம் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறியலாம். பரிசோதனை செய்ய இரண்டு நிமிடங்களும் முடிவை பதினைந்து நிமிடங்களிலும் அறியலாம்.
இதன்படி பரிசோதனை செய்து கொள்பவர்கள், தங்களுடைய முடிவை செல்பேசி செயலி வழியாக ஐசிஎம்ஆரின் கோவிட்-19 தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அங்கு தொற்றாளரின் தரவுகள் பராமரிக்கப்படும். அவை ரகசியமாக வைக்கப்படும்.
இந்தியாவில் தற்போதைக்கு மைலேப் டிஸ்கவரி செல்யூஷன்ஸ் தயாரிப்பான கோவிசெல்ஃப்டிஎம் பேத்தோகேச் சுயபரிசோதனை கிட்டை மட்டுமே ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்த கிட்டுகள் இந்திய மருந்தகங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கிட் விலை ரூ. 250 ஆக இருக்கும்.(பிபிசி)