கிளிநொச்சி மாவட்ட கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதி வழங்கல்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று (10) வழங்கி வைத்தார்
பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்ற குறித்த ஒன்று கூடலில் சம்பிரதாயபூர்வமாக ஏழு பேருக்கு அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கௌதாரிமுனைப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான சுமார் 52 பிரதேசக் கடற்றொழிலாளர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். அதனடிப்படையில், பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக, பண்ணை அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாகவும் இந்நிலையில், உடனடியாக களத்தில் இறங்கி வேலைகளை ஆரம்பிக்குமாறு பயனாளர்கள் மற்றும் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்
கலந்துரையாடலில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பணிப்பாளர் நிருபராஜ், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதானி மோகனகுமார், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இனைப்பாளர் வை.தவநாதன், மற்றும் தனியார் முதலீட்டாளர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.