மட்டக்களப்பு புளியந்தீவில் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரிற்குமாக நேற்று (10) புளியந்தீவு பொது சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில் சில அரச திணைக்களகங்கள் மற்றும் அலுவலகங்களிலும் இவ்வாறாக தொற்று அதிகரித்துக் காணப்படுவதனால், மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அடங்கலாக 90 பேரிற்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேரிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்டிஜன் பரிசோதனையில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கும், பொதுமக்கள் நால்வருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எவரிற்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.