இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (17) நடைபெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள்
01. எம்பிலிப்பிட்டி விவசாயிகளின் தானியப் பாதுகாப்பு நிலையத்தை மசாலாப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கல்
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய 200 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டு நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வுகூடம் மற்றும் தானியங்களை உலர்த்தும் இயந்திரங்களுடன் 4000 மெட்ரிக்டொன் இயலளவு கொண்ட தானியப் பாதுகாப்பு நிலையம் இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த தானியக் களஞ்சியத்தின் கூரையில் 100 கிலோவாற்று இயலளவுடன் கூடிய சூரிய மின்கலத் தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. இத்தானியப் பாதுகாப்பு நிலையத்தின் அனைத்துச் சொத்துக்களும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளரின் பொறுப்பில் காணப்படுவதுடன், மாவட்டச் செயலாளரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் மூலம் குறித்த நிலையத்தின் முகாமைத்துவப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் நோக்கில் மசாலாப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கையில் தரமான வாயுகோளத்தின்; அனுகூலங்களை நிலைபேறான வகையில் பேணும் கருத்திட்டம்
கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகமான நாடுகள் முடக்கப்பட்டமையாலும், பயணக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டமையாலும் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் குறைவடைந்தமையால் 2020 மார்ச் மாதம் தொடக்கம் அந்தந்த நாடுகளிலுள்ள நகரங்களில் வாயுகோளத்தின் தரம் அதிகரித்திருக்கின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய வலயத்தில் கூடுதலான நகரங்களில் கொவிட் – 19 தொற்றுப் பரவலுக்கும் வாயுகோளத்தின் தரத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுக் கற்கைகள் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது. இந்நிலைமையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின்; ‘இலங்கையில் தரமான வாயுகோளத்தின் அனுகூலங்களை நிலைபேறான வகையில் பேணும் கருத்திட்டம் : அடையாளங் காணப்பட்ட 25 செயற்பாடுகளை கொவிட் – 19 தொற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தல்’ எனும் பெயரிலான கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த மதிப்பீட்டுச் செலவாக 15,000 அமெரிக்க டொலர்கள் கொண்ட இக்கருத்திட்டத்தின் மூலம், ‘கொவிட் – 19 மற்றும் கொழும்பு நகர வாயுகோளத்தின்; தரம்’ தொடர்பான கொள்கை ரீதியானதும் தொழிநுட்ப ரீதியானதுமான பகுப்பாய்வை மேற்கொள்வதற்கும், வாயுகோளத்தின் தரத்தை அதிகரிப்பதற்குமான கொள்கை வகுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய துறைகளை அடையாளங் காணல், வாயுகோளத்தின் தரத்தை நிலைபேறான தாக்கல் மற்றும் தூய்மையான வாயுக்களின் தரத்தை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளில் பெறுபேறுகளைக் கொண்ட உயர்ந்த மட்டத்திலான வேலைத்திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் ‘கொழும்பு நகரத்தில் தொற்று நிலைமையின் பின்னரான வாயுகோளத்தின் தரத்தை நிலைபேறான வகையில் மேம்படுத்தல்’ தொடர்பான பங்காளர்களின் உரையாடலில் பகிர்ந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. தூய சிலோன் தேயிலை (Pure Ceylon Tea) ஏற்றுமதிக்கான வர்த்தகக் குறியீட்டு நாமத்தை மேம்படுத்தும் யோசனை முறை
2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய தேசிய புலமைச் சொத்துக்கள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்குச் சொந்தமான சிங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட தூய சிலோன் தேயிலை வர்த்தகக் குறியீட்டு நாமத்தை மேம்படுத்துவதற்காக விநியோக விரிவாக்கல் செலவின் 50மூ வீதமான சீர்செய்தல் ஒதுக்கீடு வழங்கும் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2015/2016 காலப்பகுதியில் 20 கம்பனிகளும், 2018ஃ2019 காலப்பகுதியில் 18 கம்பனிகளும் அனுகூலங்களைப் பெற்றுள்ளன. மிகவும் முன்னேற்றகரமான பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிலோன் தேயிலையை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021ஃ2022 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகக் குறியீட்டு நாமத்தை ஊக்குவிக்கும் யோசனை முறையை மேலும் விரிவாக்கம் செய்து தற்போது 12 நாடுகளில் உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காணப்படும் சிலோன் தேயிலை விற்பனை நிலையங்களை Ceylon Tea Shops and Houses) விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. பாடசாலைச் சீருடைத் துணி கொள்வனவு செய்தல் – 2022
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக் கோரப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் 05 பேர் விலைமனு சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய விலை பேரம் பேசிய பின்னர் உடன்பாடு தெரிவிக்கப்பட்ட விலைக்கு பாடசாலைச் சீருடைத்துணிகளை குறித்த விபரக் குறிப்புக்களுக்கமைய உற்பத்தி செய்து, பிரித்து, பொதியிட்டு கோட்டக் கல்வி வலயங்களுக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தங்களைக் கீழ்வரும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேன்கார்ட் இன்டஸ்ரீஸ் (தனியார்) நிறுவனம்
தங்கொட்டுவ வீவிங் (தனியார்) கம்பனி
பிரபா டெக்ஸ் இன்டஸ்ரீஸ்
க்ரியேரிவ் டெக்ஸ்ரயில் மில்ஸ் (தனியார்) கம்பனி
ஸ்ரார் டெக்ஸ் (தனியார்) கம்பனி
05. 2015 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் திருத்தம் செய்தல்
2015 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல்கள் அதிகாரசபை சட்டத்தை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்காக 2019 மார்ச் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல்கள் அதிகாரசபையின் நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த சட்டத்தை மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, பொதுமக்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்து மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளங் காண்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காகவும், அடையாளங் காணப்படும் குறித்த திருத்தங்களை உள்வாங்கி 2015 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல்கள் அதிகாரசபை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்குவதற்காக கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்
இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை வாய்ந்த அழுத்தங்களுக்கு ஆளாகியவர்களை அடையாளங் காண்பதற்காகவும் பொருத்தமான வகையில் தனியாகவும் கூட்டாகவும் இழப்பீடுகளை வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இழப்பீட்டு அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கமைய, அழுத்தங்களுக்கு ஆளாகியவர்களுக்கு தனியாகவும் கூட்டாகவும் இழப்பீடுகளை வழங்குவதற்காக கொள்கை வகுப்புக்களை மேற்கொள்வதற்கான பொறுப்புக்கள் குறித்த அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்காகவும், ஏற்புடைய நிரல் அமைச்சுடன் இணைந்து குறித்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டம் திருத்தம் செய்தல்
இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு நொத்தாரிசு ஒருவர் முன்னிலையில் அல்லாமல் ஆனாலும் சாட்சியாளர்கள் 05 பேர் முன்னிலையில் மாத்திரம் எழுதப்பட்டு ஒப்பமிடப்பட்ட இறுதி விருப்பு ஆவணத்தில் ஒப்பமிடும் போது இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதே குறித்த திருத்தங்களின் நோக்கமாகும். ஆனாலும் சாட்சியாளர்கள் 05 பேர் முன்னிலையில் இறுதி விருப்பு ஆவணம் எழுதப்பட்டு ஒப்பமிடுவதற்காக, மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் செயன்முறை வலயத்தில் அமைந்துள்ள பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தல்
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் இயங்கி வரும் சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் செயன்முறை வலயத்தில் அமைந்துள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் சுத்திகரிக்கப்படும்; 9500 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீரின் அளவு 15000 கனமீற்றர் கொள்ளளவுக்கு அதிகரிப்பதற்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, முதலீட்டுச் சபை நிதியின் கீழ் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக நிர்மாணத் தொழிற்றுறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களிடமிருந்து விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஒப்பந்தத்தை சியரா கன்ஷ்ரக்ஸன் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கொவிட் – 19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 360,000 லீற்றர்களை இறக்குமதி செய்தல்
தீவிர கொவிட் – 19 நோயாளர்களுக்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, 120,000 லீற்றர் ஒக்சிசனை மாதாந்தம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பரவி வரும் திரிபடைந்த கொவிட் வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒக்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்துவதற்கு இயலுமான வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர்களுக்கு மேலதிகமாக 360,000 லீற்றர்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தடுப்பூசி கொள்வனவு செய்தல்
கொவிட் – 19 தொற்று நிலைமையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முதலில் 14 மில்லியன் சனத்தொகைக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2021 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஆகும் போது 19.49 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த தடுப்பூசி மருந்துகளில் 11.26 மில்லியன்கள் முதலாம் கட்டத்திற்கும் 3.25 மில்லியன்கள் இரண்டாம் கட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் – 19 தொற்று தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியாகும் போது தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதற்குத் தேவையான தடுப்பூசிகளை அமைச்சரவையின் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்ட அலகொன்றுக்கான விலையில் 09 மில்லியன் ளுinழிhயசஅ தடுப்பூசிகளையும் 14 மில்லியன் Pகணைநச தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. தனியார் – கூட்டுறவு பங்குடமையின் கீழ் புதிய அரிசி ஆலைகளைத் தாபித்தல்
எமது நாட்டின் வருடாந்த அரிசி நுகர்வு அண்ணளவாக 2.2 மில்லியன் மெட்ரிக்டொன்களாகும். 2020ஃ2021 பெரும்போகம் மற்றும் 2021 சிறுபோக நெல் விளைச்சல் அண்ணளவாக 4.8 மில்லியன் மெட்ரிக்டொன்களாக அமைவதுடன், குறித்த நெல் அளவில் 3.2 மில்லியன் மெட்ரிக்டொன் அரிசி உற்பத்தி செய்ய முடியும். சந்தையில் அரிசியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலைமைக்குத் தீர்வாக நெல் விளைச்சலில் குறிப்பிடத்தக்களவு தொகையை கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து நியாய விலையில் விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, தனியார் – கூட்டுறவு பங்குடமையின் கீழ் குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய 05 அரிசி ஆலைகளை தாபித்து, அடுத்த போகத்திலிருந்து நெல் கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து, லங்கா சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிப்பதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. கொவிட்-19 தொற்று நிலைமையால் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக தொலைக்காட்சி சேவைகளின் ஒத்துழைப்புக்களைப் பெறல்
கொவிட்-19 தொற்று நிலைமையால் பாடசாலைகளைத் திறப்பதற்கு சிரமங்கள் காணப்படுவதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்கீழ் ‘ஈ-தக்சலா’ கற்றல் முகாமைத்துவத் தொகுதி, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ‘ஐ’ மற்றும் ‘நேத்ரா’ அலைவரிசைகளில் ‘குருகுலம்’ தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு மட்டத்திலான கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாகாண கல்வித் திணைக்களத்தின் மூலம் பிராந்திய வானொலி அலைவரிசைகள், கல்வி முகாமைத்துவ தொகுதி மற்றும் “SLT PEO TV” அலைவரிசைகள் மூலம் நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை அனைத்துப் பாடவிதானங்களும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக ஒளிபரப்புவதற்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஒளிபரப்பு நேரம் போதுமானதாக இல்லை. அதனால், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் கற்பித்தல் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட 07 அலைவரிசைகள், ‘ளுடுவு Pநுழு வுஏ’ அலைவரிசை வலைப்பின்னல் ஊடாக இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குருகுலம் கற்பித்தல் உள்ளடக்கங்களை குறித்த 07 அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கும் எதிர்வரும் காலங்களில் குறித்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 20 வரை விரிவாக்கம் செய்வதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய, விநியோக மற்றும் போக்குவரத்து வாகனங்கள் அரச நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான பெறுகைக் கோரல்
கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய, விநியோக மற்றும் போக்குவரத்து வாகனங்களை அரச நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக முற்கூட்டிய தகைமைகளைப் கொண்ட விநியோகத்தர்களிடமிருந்து விலைமனுக் கோரலைப் பெறுவதற்கு 2021 மார்ச் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 06 பக்கேஜின் கீழ் 04 நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்ளடக்க இணைப்புநிலை அபிவிருத்தி கருத்திட்டம் (Inclusive Connectivity and Development Project)
எமது நாட்டில் பயணிகள் போக்குவரத்து 95மூ வீதமும் பண்டங்கள் போக்குவரத்து 98% வீதமானவையும் தரைமார்க்கமாகவே இடம்பெறுகின்றன. அதனால், தங்குதடையின்றிய தரைமார்க்கப் போக்குவரத்துக் கட்டமைப்பு காணப்படுதல் கிராமிய பிரதேசங்களுக்கான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான காரணியாக அமைகின்றது. பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் காலநிலைக்குத் தாங்குதிறன் கொண்ட வீதித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் சமூக வலுவூட்டல் கருத்திட்டங்களை தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாய விநியோகச் சங்கிலியை பலப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிதியுதவியுடன் ‘உள்ளடக்க இணைப்புநிலை அபிவிருத்தி கருத்திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டம் ‘பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் காலநிலைக்குத் தாங்குதிறன் கொண்ட வீதித் தொடர்புகளை மேம்படுத்தல்’ மற்றும் ‘விநியோகச் சங்கிலி மற்றும் விவசாயிகளுக்கான சேவைகள் அணுகுமுறைகளை மேம்படுத்தல்’ எனும் இரு கூறுகளாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை விவசாய அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குப் பொருத்தமான பொறிமுறையை வகுப்பதற்கும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் அரிசி இறக்குமதி செய்தல்
தற்போது சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை பின்பற்றி துரிதமாக 6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.