இலங்கை – கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு திசையில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பல் நேற்று (20) பகலில் தீப்பிடித்தது என்ற தகவல் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து இலங்கை கடற்படையின உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் Fast Attack Craft கப்பலொன்றையும் அந்தக் கடற் பிரதேசத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கையெடுத்தனர். தற்போது, இந்த பகுதியில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இழுவை படகு ஒன்று நிறுத்தப்பட்டது.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல், 2021 மே 15 அன்று இந்திய துறைமுகமான ஹசிராவிலிருந்து 25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் அழகுசாதனப் பொருட்களடங்கிய 1,486 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. கொழும்பு கடற்கரையில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் 25 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
2021 மே 20 ஆம் தேதி மாலை, இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை கடற்படையின் நிபுணர்கள் குழு கப்பலுக்குள் பிரவேசித்து அதன் நிலையை ஆய்வு செய்ததுடன், கப்பலில் இருந்த இரசாயனங்கள் கசிந்ததினாலேயே இந்த தீ ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவசர நிலைக்காக கடற்படை சிறப்புப் படைகளும், கடலோரக் பாதுகாப்புபடையும் தயாராக உள்ளதுடன், தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் இழுவை படகு தீயைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றது.