மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவி ஏற்பு
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb172-1-e1629684596645.jpg)
மலேசியாவில் கரோனாவை கட்டுப்படுத்த தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என தொடர் அழுத்தத்தை தொடர்ந்து மலேசிய பிரதமராக இருந்த மொஹிதின் யாசின் தனது பதவியை சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்.
பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மலேசிய வரலாற்றில் நீண்ட நாள் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய மலேசிய தேசிய கட்சியின், இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மலேசிய மன்னர் அப்துல்லா அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 61 வயதாகும், இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந்த சனிக்கிழமை (21) மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
மொஹிதின் யாசின் அமைச்சரவையில் அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர்தான் இஸ்மாயில் சப்ரி யாகோப்.
மலேசிய பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள இஸ்மாயில் சப்ரி யாகோப்க்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்துவதுதான் புதிய பிரதமருக்கு சவாலானதாக இருக்கும் என்று மலேசிய அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(இந்து)