ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், காபூல் விமானநிலையத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உறுதியானது. அது குறித்து தகவல்களை வெளியிடமுடியாது என்று ரோஸ் வில்சன் கூறியிருந்தார்.(இந்து)