பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சித் துறைகளில் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகப் பணி புரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹுஸைன் பாரூக்கின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக அதன் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் வீடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மர்ஹூம் ஹுஸைன் பாரூக், கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர். தினபதி பத்திரிகையினூடாக ஊடகத் துறையில் பிரவேசித்த இவர், 1956ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் ஒன்றைப் பாடியதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்வாங்கப்பட்டார்.
பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் தயாரிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். பின்பு ஐரீஎன், வர்ணம் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.
வானொலியில் மிகப் பிரபலமான கலை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி, நேயர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த ஒரு கலைஞர் ஆவார். அபூநானா, ஆரிபா, முத்துச்சரம், இப்படிப் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆலோசகர் மற்றும் செயற்குழு உறுப்பினர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் அலையன்ஸில் செயலாளராகவும் இருந்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கலாபூஷணம் விருதை வென்றஅவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களிடமிருந்து “லியாஉல் பன்னான்” விருதையும் 1992ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.
வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்க வேண்டுமெனவும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு மன ஆறுதலைக் கொடுக்க வேண்டுமெனவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.” எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபம் செயதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.