crossorigin="anonymous">
வெளிநாடு

ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்

எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளி யேறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறிவிட்டன. இதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினரை பாதுகாப்புடன் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று ஆப்கன் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது. இதன்படி இந்திய தலைமையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிருங்லா, “எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கவும் ஆப்கானிஸ்தான் மண்ணை யாரும்பயன்படுத்தக் கூடாது” என்று பேசினார்.

இதையடுத்து நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் ஆப்கனில் இருந்து வெளியேற விரும்புவோர் செல்ல வழி ஏற்படுத்தப்படும் என்று தலிபான்கள் கடந்த 27ம் தேதி தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆப்கனில் உள்ள பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 13 நாடுகளின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.(பிடிஐ-இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 19 = 27

Back to top button
error: