கத்தாரில் இந்திய தூதுவர் தலிபான் தலைவருடன் சந்திப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப்பெறப்பட்ட நிலையில் முதன்முறையாக தலிபான் தலைவரை இந்திய தூதர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு கத்தார் நாட்டில் நடந்துள்ளது. சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் தலிபான் தரப்பில் அவர்களின் அரசியல் பிரிவு தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானக்சாயியும் இந்தியத் தரப்பில் கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டலும் பங்கேற்றனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளுக்காக பயங்கரவாதிகள் பயன்படுத்தக்கூடிய ஆபத்து பற்றி தலிபான் தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது தலிபான் தலைவர் இது தொடர்பாக நிச்சயம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஆப்கனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்கள் இந்தியாவிடம் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்பது குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், இந்தியா சாலைகள் அமைப்பு, அணை கட்டுதல், அரசு கட்டுமானங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துவந்தது. இந்நிலையில், அங்கு தலிபான் வசம் ஆட்சி சென்றுவிட்டதால் தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இன்னும் சில இந்தியர்கள் அங்கே உள்ளனர். அவர்களையும் மீட்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.(இந்து)