இலங்கை நாட்டு மக்களின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்hதற்காக . 2 வெசாக் பௌர்ணமி தினங்கள் தவிர்த்த ஏனைய நாட்களில் பொருளாதார மத்திய நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நேற்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலொன்றின்போது எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படிஇ மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தவும், மீன்களை கடற்றொழில் அமைச்சினூடாக தொடர்ச்சியாக கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலக மட்டத்தில், கிராம மட்டத்தில் இந்தப் பொருட்களை விநியோகிப்பதற்கு, ஒரு கிராமத்திற்கு ஒரு வர்த்தக நிலையத்தை மட்டும் திறப்பதற்கும், ஒரு நடமாடும் சேவையை செயல்படுத்துவதற்கும, மருந்தகங்களைத் திறந்து வைப்பதற்கும், நடமாடும் சேவைகள் மூலம் பேக்கரி தயாரிப்புக்களை விநியோகிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தேவையான விநியோக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முறையாகச் செயல்படுவதால், மக்கள் தேவையின்றி குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.