ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக ஹசன் அகுந்த், துணை தலைவர் அப்துல் கனி பரதார்

ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தலைவர்களின் பட்டியலை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதன்படி தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய இடைக்கால அரசின் தலைவராக இருப்பார் என்றும் அப்துல் கனி பரதார் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காகவே ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் தலைவராக இருப்பார் என்றும் அப்துல் கனி பரதார் துணைத் தலைவராக இருப்பார் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் தலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமயகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இவர் தலிபான் நிறுவனம் முல்லா முகமது ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018ல் அவர் விடுவிக்கப்பட்டார். ட்ரம்ப் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பகத்தன்மை நிறைந்த முகமாகக் கருதியது. முல்லா பரதார் அவருடைய பல்வேறு தாக்குதல்களால் அறியப்பட்டாலும் கூட 2004, 2009 எனத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லா பரதார் இன்று ஆப்கன் வந்தபோது தலிபான்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், மக்கள் இதை எப்படி வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை.
1980களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது. இந்த பனிப்போரில் குளிர்காய நினைத்த அமெரிக்கா சோவியத்துக்கு எதிரான முஜாஹிதீன் படைக்குள் சில பிரச்சினைகளை உண்டாக்கியது. அதிலிருந்து விலகிய சில உறுப்பினர்களுடன் 1994ல் தலிபான் படைகள் உருவாகின. 1996ல் அதன் கை மேலோங்கியது. நாட்டில் தீவிரமாக இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை விதித்தது தலிபான் படைகள். மேலும் மத சிறுபான்மையினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமர். 2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் தலிபான் படைகள்ளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்தது. அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாமல் அதன் அப்போதைய தலைவர் முல்லா முகமது ஒமர் தலைமறைவானார். 2013 ஆம் ஆண்டுவரை முல்லாவின் நிலவரம் என்னவென்பது மிகப்பெரிய ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. 2015ல் முல்லாவின் மரணத்தை அவரது மகன் உறுதி செய்தார்.
இப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்தப் படையில் ஹைபத்துல்லா அகுன்சதா, முல்லா முகமது யாகூப், சிராஜுதீன் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பரதார், ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், அப்துல் ஹகீம் ஹக்கானி ஆகிய 6 பேரும் மிக முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிகழ்ச்சியில் 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஆகும் இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 90களிலே அவர்களுக்கு ஆதரவு அளித்தன.தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கத்தாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.(இந்து)